தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் பல்வேறு சுவாரசிய சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. நெல்லை மாவட்டம் சிவந்திபட்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெருமாத்தாள் பாட்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து 1000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவருக்கு வயது 90. இந்நிலையில் இன்று (20.10.2021) சிவந்திபட்டு ஊராட்சி மன்றத் தலைவராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தமிழ்நாட்டின் மிகவும் வயதான ஊராட்சி மன்றத் தலைவர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். இதுதொடர்பாக பெருமாத்தாள் பாட்டி கூறியதாவது, “வாக்களித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு 90 வயதாகிறது, 7 பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் வெற்றிபெற்றுவருகிறார்கள். நான் தற்போது முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளேன். ஊர் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நான் செய்து கொடுப்பேன்” என்றார்.