திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டாரம், ஆவினங்குடி, செங்கமேடு, வையங்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ஆனால் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்காமல் கடந்த ஒரு மாதமாக வெயில், மழையில் நனைந்து வந்தது.
தற்போது திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகி விட்டது. சில நெல் மூட்டைகள் முளைத்தும், சில மூட்டைகளில் இருந்தநெல் அழுகியும் சேதமடைந்து உள்ளது.நெல் மூட்டைகளை எலி, கோழி, பன்றிகளும் வீணாக்கி வருகிறது. இதனால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாகி அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் அலட்சியமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து இந்த இழப்பீட்டு தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே நெல் மூட்டைகளை வீணாக்காமல், கொள்முதல் செய்தவுடன் சேமிப்பு கிடங்கிற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களையும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Time:2 Minute, 41 Second