உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:-
ஆண்டுதோறும் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தினம் அக்டோபர் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் குறைபாடு காரணமாக முன்கழுத்துகழலை, தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 27 சதவீத இளம் பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அயோடின் பற்றாக்குறை குறைபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் பங்கேற்ற ஓவிய போட்டி கல்லூரி முதல்வர் அறவாழி தலைமையில் நடைபெற்றது.
இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து பரிசுகளை வழங்கினார். முன்னதாக கல்லூரியின் இணைப்பேராசிரியர் பொன்னி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் பிரதாப் குமார் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு குறித்து உறுதிமொழியை வாசித்தார். மேலும் நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தா, சுகாதார பணி நேர்முக உதவியாளர், துணை இயக்குனர் மருத்துவர் பாஸ்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் தருமபுரம் ஞானாம்பிகா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் தமிழ்த்துறை சமூக சேவைக் குழு உறுப்பினருமான ஆர்.இளவரசி நன்றியுரையாற்றினார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.