தமிழ்நாட்டிற்காக தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன் வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசின் நலத்திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும் வகையிலும், அரசு அலுவலகங்களை நாடி மக்கள் நீண்ட தூரம் பயணிப்பதை தடுக்கும் வகையிலும், சீரான நிர்வாக அமைப்பிற்கு வழி வகுக்கும் வகையிலும் பெரிய வருவாய் மாவட்டங்களை பிரிப்பதில் அ.தி.மு.க. முக்கியத்துவம் அளித்துவந்தது.
அந்த வகையில் அம்மா முதன் முறையாக தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக நாகப்பட்டினம் மாவட்டத்தை 18.10.1991 அன்று உருவாக்கினார். இதற்கென பிரமாண்டமான விழா நாகப்பட்டினத்தில் அம்மாவால் எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பிரிந்ததற்கு முன்னோடியாக விளங்கும் மாவட்டம் நாகப்பட்டினம் என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாக அந்த மாவட்டம் வளர்ச்சி அடைந்ததோடு, அந்த மாவட்டத்திற்கு என்று புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் அந்த மாவட்ட மக்களை விரைந்து சென்றடைந்தன.
வரலாறு மற்றும் கலாசாரம் முக்கியத்துவம் வாய்ந்ததும், சோழ மண்டலத்தின் ஓர் அங்கமாக விளங்கியதுமான நாகப்பட்டினம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களும் வண்ணமிகு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நாகபட்டினம் மாவட்டம் உருவான வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளதாக செய்தி வந்துள்ளது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
அதேசமயத்தில் அம்மாவால் 18.10.1991 அன்று பிரமாண்டமான விழா எடுக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தை தொடங்கி வைத்தது குறித்த புகைப்படம் ஏதும் கண்காட்சியில் இடம் பெறாதது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக வந்துள்ள செய்தி மன வேதனையை அளிக்கிறது. ‘‘மாற்றாந் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற பேரறிஞர் அணணாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அண்ணாவின் பொன்மொழிக்கு முற்றிலும் மாறான வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டிற்காக தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன் வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா. இன்னும் சொல்லப்போனால், டெல்டா மாவட்ட மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான காவேரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு இதழில் வெளியிடச் செய்தவர் அம்மா.
இந்த வகையில் அம்மாவால் உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியில் அந்த மாவட்டம் உருவாக காரணமாக இருந்த அம்மா தொடக்க விழாவில் பங்கு கொண்ட புகைப்படம் இடம் பெறாதது வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு சமம்.
உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் வரலாறு. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதற்கு இடம் அளிக்கக்கூடாது. உள்ளதை திரித்து சொல்வது வரலாறு ஆகாது. இந்த விழா 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அம்மா தொடக்க விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தினை கண்காட்சியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்போதுதான் இளைய சமுதாயத்தினர் அந்த மாவட்டம் உருவான வரலாறை தெரிந்து கொள்ள முடியும்.
எனவே முதல்- அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் உருவான வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியில் அம்மா இந்த மாவட்ட தொடக்க விழாவில் பங்கு கொண்ட புகைப்படத்தினை இடம் பெறச் செய்து அம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.