மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என் பி கே கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கே.முருகன் முன்னிலை வகித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. எம்.ஜி.ஆர். அவர்களால் 1987-ஆம் ஆண்டு திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவந்த NPKRR சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. NPKRR ஆலை இயங்கியபொழுது, மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, திருவிடைமருதூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விவசாயிகள் ஆலை தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என அனைவருடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கிவந்த ஒரே ஒரு கூட்டுறவு ஆலையும் மூடப்பட்டுவிட்டதால் இதனை நம்பி வாழ்ந்த விவசாயிகளும், ஆலை தொழிலாளிகளும் வர்த்தகர்ளும், விவசாய தொழிலாளர்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விவசாயத்திற்காக தனி நிதி நிலை அறிக்கை சமர்பித்து சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக அரசு மூடப்பட்டுள்ள ஆலையை புனரமைத்து, கரும்பு அரவையை துவக்கவேண்டுமென வலியுறுத்தியும். இதற்கு மாறாக, நெல் சேமிப்பு கிடங்காக ஆலையின் வளாகத்தை பயன்படுத்த முயற்ச்சிக்கும் சில அரசு அதிகாரிகளின் முயற்ச்சியை தடுத்து ஆலையை திறந்து, தனியார் ஆலைகளின் கொள்ளைகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் துரைராஜ், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் குரு.கோபி.கணேசன், டெல்டா பாசனதாரர்கள் சங்க பொது செயலாளர் அன்பழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், பாலகிருஷ்ணன், லிங்கேஸ்வரன், ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.