அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், சசிகலாவையும், தினகரனையும் கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக எனத் தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் அறிவித்துள்ளதாகவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிடப்பட்டது.