காரைக்காலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட பாமக செயலாளர் தேவமணி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று திருநள்ளாற்றில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாற்றில் உள்ள தேவமணி இல்லத்திற்கு நேரில் வந்து காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவ மணியின் மனைவி மாலா(42), மகன் பிரபாகரன் (எ) அப்பு(26), 2 மகள்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேவமணி படுகொலை கண்டிக்கத்தக்கது என்றும் இவருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததாகவும் இதனை காவல்துறையினர் கவனிக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லாத நிலையில் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணை வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
படுகொலையின் பின்னணியில் பெரிய சதியே இருப்பதாகவும் இது குறித்து தீவிரமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வன்னியர் சங்க தலைவர் அருண்மொழி புதுச்சேரியில் தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கொலைகள் நடைபெற்று வருவதாகவும் பின்னணியில் பெரிய சதி கும்பல்கள் இருப்பதாக தெரிய வருவதாகவும் காவல்துறையின் ஒத்துழைப்போடு கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி காவல் துறையினர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் சிபிஐ விசாரணையை கோருவதாக தெரிவித்தார்.
இதில் வன்னிய சங்க செயலாளர் கா.வைத்தி, மாநில துணை பொது செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் எஸ் கே ஐயப்பன், மாநில அமைப்பு துணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் மு க ஸ்டாலின், கடலூர் மாநில துணை பொது செயலாளர் முத்துகிருஷ்ணன், கடலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வி சி கே காமராஜ் மற்றும் பாமக பொறுப்பாளர்கள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.