நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக பல்வேறு தரப்பு மக்களும், இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வகைகளில் அவர்களை பெருமைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களை போற்றியும், இந்திய மக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனைப் படைத்ததற்கு மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை, சென்னை கமலாலயத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 818 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 116 பேர் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 73 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு மேலும் பலருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரனோ வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காவல்துறை, வருவாய்த்துறை, தூய்மைப் பணியாளர்கள் என பலரும் தங்கள் பணியினை சிறப்பாக செய்து வந்தனர். இவர்களை சிறப்பிக்கும் விதமாக பாஜக சார்பில் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மயிலாடுதுறைக்கு வந்துள்ள பிரதமர் மோடி கையெழுத்திட்ட இந்த வாழ்த்து அட்டைகளை மயிலாடுதுறை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கும், காவல்துறை, ஊடகத்துறையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், எரிவாயு தகனமேடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி, இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றன.