மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பலநூறு ஆண்டுகள் பழமையான பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வண்டிக்காரர் தெரு மாரியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.
இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் விக்னேஷ்வரபூஜையோடு துவங்கியது. தொடர்ந்து ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தது.
இதனை முன்னிட்டு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு நடைபெற்றது. வேதமந்திரங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.