கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத செராமிக் கம்பெனியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு, சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சி, ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 7¾ டன் ரேஷன் அரிசி 156 மூட்டைகளிலும், 4,400 கிலோ கோதுமை 58 மூட்டைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு ஏராளமான காலி சாக்குகள், மூட்டைகளை தைக்கும் எந்திரமும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7¾ டன் ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் மற்றும் அங்கிருந்த சாக்குகள், தையல் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே குடோனுக்கு வெளிபகுதியில் ஆய்வு செய்தபோது மினி லாரி ஒன்றில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனையும் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அவற்றை விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கனிடம் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக சின்ன பண்டாரங்குப்பத்தைச் சேர்ந்த ராதா, மங்களூர் புது காலனியை சேர்ந்த மணிகண்டன், விருத்தாசலத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது கடலூர் குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள ராதா, காா்த்திகேயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு கோதுமை சரியாக வழங்கப்படாத நிலையில், கடத்தல்காரர்களுக்கு எப்படி கோதுமை கிடைத்தது என்றும், இந்த சம்பவத்தில் ரேஷன் கடை அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருந்தது யார் என்பது பற்றி விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Read Time:3 Minute, 28 Second