வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா ஏரி முழு கொள்ளளவை எட்டியது. வீராணம் ஏரிக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதற்கிடையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்த படி இருந்தது. பகல் 11 மணிக்கு கன மழை பெய்தது. அதன்பிறகு சற்று மழை ஓய்ந்த நிலையில், மதியம் 2.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடத்தை தாண்டி கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தும், குடைபிடித்த படியும் சென்றதை பார்க்க முடிந்தது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாலையோர கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக துணிக்கடைகள் அதிகம் இருந்தன. ஆனால், நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்து வந்த மழையின் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் பண்டிகைக்கால வியாபாரம் நேற்று பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, தொழுதூர், சேத்தியாத்தோப்பு என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 16.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக பெலாந்துறை, கீழசெருவாய், கொத்தவாச்சேரியில் தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-பரங்கிப்பேட்டை-14.6, அண்ணாமலைநகர் -11.8, லால்பேட்டை -10, காட்டுமன்னார்கோவில்-8, புவனகிரி- 6, குடிதாங்கி-5, கடலூர்-4.7, தொழுதூர் -4, பண்ருட்டி -3, வானமாதேவி -3, கலெக்டர் அலுவலகம் -2.6, சேத்தியாத்தோப்பு, லக்கூர், விருத்தாசலம், வடக்குத்து, மே.மாத்தூர் தலா 2 மில்லிமீட்டர், குப்பநத்தம்-1.2.
Read Time:4 Minute, 18 Second