மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 க்கும் அதிகமான பைபர் படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இந்த பைபர் படகுகளில் டீசலால் இயங்கும் லம்பாடி எஞ்சின் பயன்படுத்தி இயக்கி வருகின்றனர்.
மேலும், டீசல் எஞ்சின்களை கொண்டு படகுகளை நின்ற நிலையில் இயக்கும் போது அலைகளின் தாக்கத்தில் அதன் விசை அழுத்தம் முழுவதும் மீனவர்கள் மீதே தாக்குவதால் அதிக அதிர்வுகள் உடலில் ஏற்பட்டு மீனவர்களுக்கு உடல் வலி, எலும்பு தேய்மானம் என பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் லம்பாடி எஞ்சினுக்கு மாற்றாக மீனவர்கள் பெட்ரோலில் இயங்கும் அதிர்வில்லாத சுசுக்கி இஞ்சினுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மீனவர்களை கலக்கமடைய செய்துள்ளதால் இதற்கு மாற்று வழியை யோசித்து எரிவாயு கொண்டு படகு இஞ்சினை இயக்க முயற்சித்துள்ளனர்.
அதனை அடுத்து தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் தெய்வராஜ் தனது இஞ்சின் படகை எரிவாயுவின் மூலம் இயங்குமாறு வடிவமைக்க வேண்டி தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ஆராய்சி நிறுவனத்தை அனுகினார். மீனவரின் விருப்பத்தை அடுத்து ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மெக்கானிக் சுரேஷ் என்பவரும் இணைந்து 1 மாத உழைப்பில் முழுவதும் எரிவாயுவால் இயங்கும் வகையில் பிரத்யோக அமைப்புகள் உருவாக்கி பெட்ரோல் இஞ்சினை மாற்றம் செய்தனர். மேலும் கடலில் தொடர்ந்து பல மணிநேரம் இயக்கி சோதனை செய்தனர்.
சோதனையில் பெட்ரோல் கொண்டு இயக்கினால் கடலில் ஒரு நாட்டிக்கல் செல்ல 45 முதல் 50 ரூபாய் செலவாகும் நிலையில் எரிவாயு மூலம் இயக்கினால் 20 ரூபாய் மட்டுமே செலவானதை மீனவர் தெய்வராஜ் உறுதி செய்தார். அதனை தொடர்ந்து மீனவர் தெய்வராஜ் மற்றும் ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தார் நேற்று சக மீனவர்கள் மத்தில் படகை இயக்கி பரிசோதித்து காண்பித்தனர். எந்த வித அதிர்வும் சப்தமும் இல்லாமல் படகு தடையின்றி இயங்குவதாலும், எரிபொருள் செலவீனம் பாதிக்கு பாதி குறைவதாலும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த வகை படகு இஞ்சினுக்கு உரிய அனுமதி வழங்கவும், இஞ்சின் மற்றும் எரிவாயுக்கு தற்போது டீசலுக்கு மானியம் வழங்குவது போன்று படகை இயக்க எரிவாயுக்கும் மானியம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.