தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர்களும் காலை முதல் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர்.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு முதல் இந்தியாவிலும் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமலில் இருந்து வருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுமையாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்தாண்டு நவம்பர் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கிய பள்ளிகள், இரண்டாவது கொரோனா அலை காரணமாக நடப்பாண்டில் பிப்ரவரி இறுதி முதல் மீண்டும் மூடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்திற்கு சென்ற கொரோனா படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் மட்டும் 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர். சுமார் 34 லட்சம் மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிக்கு வர உள்ளனர். 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வருகை தர உள்ளதால், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மாணவர்களுக்காக பள்ளி நுழைவுவாயிலிலே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் அவர்களை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பள்ளிக்கல்வித்துறையும் “ நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று தொடங்கப்படும் வகுப்புகளில் பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர். இன்று திறக்கப்படும் பள்ளி வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களின் விருப்பம் இருந்தாலே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையவழி கல்வி முறையும் தொடரப்பட உள்ளது.
பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், கழிவறைகள் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
Source:ABP