கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் தனி வார்டில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு பரவாமல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கை வசதிகளுடன் தனி வார்டு அமைத்து டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களில் 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு நோய் பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடலூர் பண்ருட்டி கடலூர் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து இருந்தனர். அவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து அவர்கள் 9 பெரும் டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மொத்தம் 13 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பிளேட்லெட்டுகளும் குறைந்துவிட்டால் நோயாளியை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். இது பொதுவாக பகலில் கடிக்கும் ஏடீஸ் என்ற கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இதற்கு நில வேம்பு கசாயம் குடிக்குமாறு சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பொதுமக்களும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த பூத்தொட்டிகள், ஆட்டுக்கல், தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் பொதுமக்களை அவற்றை அப்புறப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அது போல் பப்பாளி சாற்றின் ஜூஸ், நில வேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி கூட வாய்ப்புள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.