வடலூர் பகுதியில் பாமக பிரமுகர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி அதன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசு வழங்கியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 1 ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம் முழுவதும் 2 ம் தேதி முதல் 4 தேதி வரை பயணிகளுடன் சென்ற அரசு பேருந்துமீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கியதால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
குறிப்பாக கடலூர் அருகே திருமாணிகுழி, பண்ருட்டி அருகே குயிலாப்பாளையம், நடுவீரப்பட்டு, விருத்தாசலம் பேருந்து நிலையம், ஆலடி, பெண்ணாடம், சிதம்பரம் அருகே பெரியகுமட்டி என ஒன்பது இடங்களில் பேருந்து மீது கல் வீசப்பட்டது. இதனால் பல இடங்களில் பேருந்துகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் தற்போது இது சம்பந்தமாக நெல்லிக்குப்பம் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 2 மற்றும் 4 தேதி வரை கடலூர் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். இந்தநிலையில் வடலூர் பகுதியில் பாமக பிரமுகர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி அதன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
இதில் பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் ஜோதி (வயது 29), சேதுபதி (23), கலியபெருமாள் (33), முத்துக்குமரன் (37), மூர்த்தி (38), பாலாஜி (37), ரத்தினவேல் (42), தட்சிணாமூர்த்தி (42), ராஜசேகர் (32), நந்தகுமார் (27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் பகுதியில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்ததாக ஒறையூர் கிராமத்தை சேர்ந்த ராமு (21), மாணிக்கம் (42), குணசேகரன் (45) ஆகியோரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.