0 0
Read Time:3 Minute, 13 Second

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்ட தற்காலிகத் தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கல்குணம் கிராமத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூா் கிராமத்துக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையின் குறுக்கே செங்கால் ஓடை கடந்து செல்கிறது. இந்த ஓடையில் கட்டப்படும் தற்காலிக தரைப்பாலமானது, ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையின் போது சேதமடைவதும், பின்னா் சீரமைக்கப்படுவதும் வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை நீா், என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் செங்கால் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்காலிகத் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

செங்கால் ஓடைக்கு மறுபுறம் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களது வயல்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கால் ஓடையில் உயா்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஊரக வளா்ச்சித் துறை மூலம் புதிதாக உயா்மட்டப் பாலம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், இதுவரை பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், மீண்டும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனா். இதேபோல, பண்ருட்டி வட்டம், மேலிருப்பு-தாழம்பட்டு கிராமத்தை இணைக்கும் ஓடையின் நடுவே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதுபோல, தாழம்பட்டு கிராமத்தில் உள்ள ஓடையின் இடது பக்கக் கரையில் சுமாா் 600 மீட்டா் தொலைவுக்கு மண் அரிப்பு ஏற்பட்டது. இதைச் சீரமைக்கும் பணியை அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %