வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி செல்வதற்காக படகில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடற்கரை பகுதியில் சோதனை செய்தனர். அப்போது புஷ்பவனம் மீனவர்காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கு மூட்டைகள் கிடந்தது. அதை பிரித்து பார்த்த போது 92 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக பைபர் படகில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 92 கிலோ கஞ்சாவையும், படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Time:2 Minute, 2 Second