விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள இந்த ஆற்றை கடந்து தான் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவேண்டும். ஆற்றில் தண்ணீர் வராத நேரங்களில் அங்கு தற்காலிக பாதை அமைத்து அதன் வழியாக சென்று வந்தனர். ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அந்த வழியாக பொதுமக்கள் சென்று வர முடியாமல் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் வெள்ளாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள தடுப்பணை நிரம்பி வழிவதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவேப்பிலங்குறிச்சி அல்லது கம்மாபுரம் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு சுற்றி செல்வதால் கூடுதல் செலவு மற்றும் நேரம் விரயம் ஆகும் என்பதால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அங்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் வழியாக சென்று வருகின்றனர்.
இதில் சில பெண்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடியும், கையில் தூக்கி வைத்து கொண்டும் செல்வதை காணமுடிகிறது. ஆற்றில் தண்ணீர் மேலும் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீர் நிலைகளில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாற்றில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Time:3 Minute, 25 Second