மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி மற்றும் சீா்காழி வட்டங்களில் பூம்புகாா், வானகிரி, தரங்கம்பாடி, பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா் மழை பெய்துவருவதால் மீன்பிடித் தொழிலும், விவசாயப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடா்மழை காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபா் படகுகளும், 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால், சுமாா் 25 ஆயிரம் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூம்புகாா் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் கூறியது: கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் கடலின் மேற்பரப்பில் காணப்படும் சீற்றத்தின் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை. ஏற்கெனவே மீன்வரத்து குறைவாக உள்ளதால் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக முற்றிலும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா். பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப் படகுகளும், பைபா் படகுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.