தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது.
கன மழை காரணமாக, சேலம், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை உள்பட 21 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருச்சி, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.