0 0
Read Time:3 Minute, 27 Second

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, சேந்தங்குடி, புதுத்தெரு, கால்டெக்ஸ், பூம்புகார் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்படாததால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியானால் கூட, வடிகால் வாய்க்கால்களை சரிசெய்யாமல், சம்பந்தப்பட்ட பகுதியில் நகராட்சி வாகனங்கள் மூலம் மோட்டார் கொண்டு தற்காலிகமாக உறிஞ்சி செல்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்ணாரத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து, மாபெரும் வடிகால் வாய்க்கால் சீரமைப்புப் பணி நடைபெற்றது. ஆனால் அதனை ஒட்டியே உள்ள கச்சேரி சாலையில் வடிகால் வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

இதன்காரணமாக மழைநீர் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் புகுந்து கழிவுநீரோடு சேர்ந்து வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கடந்த 15 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கச்சேரி சாலையில் மழைநீர் தேங்கி வடியாமல் நின்றது. இதையடுத்து, இன்று நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டுவந்து, வடிகால் வாய்க்கால்களை மூடி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அமைத்திருந்த 2 அடி அகல சிமெண்ட் பலகைகளை இடித்து அகற்றினர்.

மழைக்காலம் என்பதால் அப்பள்ளத்தில் யாரேனும் விழுந்து உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், இத்தனைக்காலம் இந்த வேலைகளை செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றும், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினரை கேள்விகளால் துளைத்தனர். ஆனால், நகராட்சியினரோ அதனைக் கண்டு கொள்ளாததுபோல் மழைநீரை வடியவைக்கும் முயற்சியிலேயே கவனமாக இருந்தனர். நகராட்சி ஆணையரின் வீட்டுக்கு அருகிலேயே, பூம்புகார் சாலையில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே, கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், அதனையே கண்டு கொள்ள நகராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்களான தங்கள் பகுதியை எவ்வாறு கண்டுகொள்வார்கள் என்று புலம்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %