பட்டாசு வழக்குகளை திரும்பபெறக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதம் பின்வருமாறு.
“கடந்த 4 ந் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.
அன்றைய தினத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதலாக பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் 2278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 758 வழக்கு போடப்பட்டுள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இத்தனை வழக்குகள் போட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது போன்ற நடவடிக்கைகள் இந்துக்களின் பாரம்பரியம், நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் மற்றும் அடிப்படை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழிபாட்டு உரிமையையும் பறிப்பதாகும். மேலும் நாளடைவில் பட்டாசு தொழிலையே சீர்குலைத்துவிடும்.
ஏற்கனவே சீன பட்டாசுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் உள்நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாகிவிடும்.
பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சீன பட்டாசுகள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்ய வேண்டும். சீன பட்டாசுகளை விற்பனை செய்யும்
வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, பட்டாசு தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நடைமுறைகளை கண்டறிய வேண்டும். ஆகவே, அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகிறோம்”
என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.