டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
துபாய்:
ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதேசமயம் மற்றொரு துவக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.
இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் ஆடினார்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.