0 0
Read Time:6 Minute, 54 Second

பெட்ரோகெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப்பெறுவதாகவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் விளைநிலங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்த வேண்டும். விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அரசு அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அனுமதி கிடையாது என அறிவித்ததற்கு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்னிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, கச்சா எடுக்கிறோம் என்கிற பெயரில் பேரழிவை ஏற்படுத்துகிற திட்டங்களை மத்திய அரசு அனுமதி வழங்கி வந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 10 ஆண்டுகாலம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இதனை ஏற்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற்றன. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்து உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெளியேறின. இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனுடைய துணை தொழிற்சாலைகள் ஏற்படுத்துகிற உள்நோக்கத்தோடு சிட்கோ என்று சொல்லக் கூடிய சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம் தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை பயன்படுத்தி திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறுந்தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது. இதனை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டக் குழு அமைத்து அப்பகுதியில் விவசாயிகள் பங்குகொள்ளும் உண்ணாவிரத போராட்டத்தை வரும் நவம்பர் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்ட குழுவினரோடு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அறிவிப்பாணையை அந்நிறுவனம் திரும்பப்பெறும் இதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் எனவே போராட்டம் தேவையில்லை என்றார்.

ஆட்சியர் உத்திராவதத்தை அடுத்து போராட்டத்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்ப பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்ப பெறுவதாகவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு பத்திரிகையில் விளம்பரப்படுத்தி உள்ளது. இந்நடவடிக்கையானது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து தமிழக அரசு காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை ஏற்க மாட்டோம் என்பதை உறுதி ஏற்று தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

source:ABP

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %