தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தால்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணத மழை பொழிந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கியது. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.
குறிப்பாக சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை புவனகிரி வந்தனர். புவனகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.