விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கிடங்கில் வைக்கப்படுவதற்காக கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் தானியங்கள் வீணாகின்றன. விவசாயிகள் விவசாய நிலத்தை பயிர் செய்யப்பட்டதை அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு காத்திருந்து மழையில் நனைந்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து வருகிறது. ஆனால் தற்போது விவசாயிகளிடம் இருந்து மோட்டார் ரகம் ஒரு கிலோ ரூ.20.15 காசுக்கும், சன்னா ரகம் ஒரு கிலோ ரூ.20.60காசுக்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சரியாக பாதுகாக்கப்படாத காரணத்தால் நெல்மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அங்கிருந்து லாரிகளில் ஏற்றிவரப்பட்டு பாதுகாப்பாக சேமிப்பு கிடங்கில் வைக்கப்படாமல் மழையில் நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தினால் நெல்மூட்டைகள் அனைத்தும் முளைத்துள்ளன. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைத்துவிட்ட காரணத்தினால் இதனை பயன்படுத்த முடியாது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு நடப்பதாக விவசாயிகள் மற்றும் அங்கிருக்கும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு இந்த முளைத்த நெல்மூட்டைகளை குடோனில் அடுக்குவதும் வீணானது. இதனை அரவை செய்து ரேஷன் கடைகளில் கொடுத்தாலும் பொதுமக்கள் வாங்க மாட்டார்கள். எனவே இதுபோன்ற தவறுகளை உடனே தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொள்முதல் நிலையங்களில் இழப்பீடு ஏற்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று மட்டும் 3 லாரிகளில் இருந்த நெல் மூட்டைகள் தார் பாய்களை பிரிக்கும் போது நெல் மூட்டைகள் முளைத்திருப்பது தெரியவந்துள்ளது.