சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிதம்பரம் மானா தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி, வல்லம்படுகை நடுநிலைப் பள்ளி, ந.பூலாமேடு நடுநிலைப் பள்ளி, எருக்கன்காட்டுபடுகை தொடக்கப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான உடல் வெப்பநிலை அளவீட்டு மானி, முகக் கவசங்கள், கிருமி நாசினி, சோப் திரவம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, செஞ்சிலுவை சங்கத் தலைவரும், சிதம்பரம் கோட்டாட்சியருமான கே.ரவி தலைமை வகித்து பாதுகாப்பு உபகரணங்களை பள்ளித் தலைமை ஆசிரியைகள் ஜெயக்கொடி, மலா்கொடி, தேவி, ஈஸ்வரி ஆகியோரிடம் வழங்கினாா் (படம்). செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி, மேலாண்மைக் குழு உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.