0 0
Read Time:6 Minute, 14 Second

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் வழியாக பயணித்து இறுதியாக கடலூரில் வங்க கடலில் சங்கமிக்கிறது.

 இந்த தென்பெண்ணை ஆறுக்கு கடலூர் ஒரு வடிகாலாகவே இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதில், கே.ஆர்.பி. மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபாிநீர் மற்றும் தென்பெண்ணை ஆறு, பயணிக்கும் பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் ஆற்றில் கலந்து, கடந்த 49 ஆண்டுகள் இல்லாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


அந்த வகையில், கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றது. பின்னர் மாலையில் வெள்ளம் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால், பெருவெள்ளத்தை தன்னுள் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஆறு வங்க கடலில் கலக்கும் தாழங்குடாவில் தண்ணீரை உள்வாங்க முடியாமல் போனது. எனவே ஆறு, அதன் பாதையில் இருந்து திசைமாறி கரையோர பகுதிக்குள் புகுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தையும் பெருவெள்ளம் சூழ்ந்தது.

அதாவது கடலூர் மாவட்டத்தில் காவனூர் என்கிற இடத்தில் தான் தென்பெண்ணை ஆறு நுழைகிறது. அங்கிருந்து சுமார் 46 கி.மீ. தூரம் வரைக்கும் பயணித்து கடலூரில் தாழங்குடா கடலில் கலந்து வருகிறது. ஆறு பயணிக்கும் இந்த இடைப்பட்ட பகுதி முழுவதையும் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு குடியிருப்புகள் மிதப்பதுடன், நெல், சவுக்கு, கரும்பு என்று வயல்கள் அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. 

இதில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு, பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 16 ஆயிரத்து 500 ஏக்காில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி மற்றும் காய்கறி வகை பயிா்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் பகுதியில் மட்டும் சுமாா் 100 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 22 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சீறி பாய்ந்த வெள்ளம், நேற்று சற்று குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி என்கிற நிலையில் நீர் வரத்து இருந்தது. எங்கு கரை உள்ளது என்று தெரியாத வகையில் சென்ற வெள்ளம் குறைந்து, அதன் இயல்பான வழித்தடத்திலேயே பயணித்து கொண்டு இருக்கிறது.
ஆறு தனது சீற்றத்தை குறைத்து கொண்டாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வர முடியாத நிலையிலேயே உள்ளனர். அந்தளவுக்கு பாதிப்புகள் ஏராளம். 
கரையோர குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீா் வடிவதற்கான எந்த வழியும் இல்லை. அதேபோல் தான் வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகளும், என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். 

 இதற்கிடையே குடியிருப்பு பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடலூர், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்களும், பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் குமரப்பன் நகர், குறிஞ்சி நகர், கங்கணாங்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த சுமார் 500 பேரை படகுகள் மூலம் மீட்டு வந்தனர்.தொடர்ந்து மீட்பு படையினர் வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என படகுகளில் சென்று கண்காணித்து வருகின்றனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %