வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழ்நாடு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.