தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான அதிகாரிகள் இரு குழுவினராக பிரிந்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர், சென்னை, கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் தண்ணீர் தேங்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான மற்றொரு குழுவினர், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றனர். அவர்களை சந்தித்த எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 80 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, மனு அளித்தார்.
சாலைகள் மற்றும் பாலங்களை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கன்னியாகுமரி பயணியர் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த மழை சேதங்கள் குறித்த புகைப்படக் காட்சிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், வடக்கு தாமரைக்குளம் பகுதிக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், பாதிப்புகளை மதிப்பீடு செய்து, மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.