சாத்தனூர் அணையில் இருந்து திடீரென வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19-ந் தேதி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதில் தென்பெண்ணையாறு கடலூர் மாவட்டத்திற்குள் நுழையும் காவனூரில் இருந்து கடலில் கலக்கும் இடமான தாழங்குடா வரை ஆற்றில் இருந்து வெள்ளம் வெளியேறி ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள்ளும் புகுந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், 16 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
பின்னர் ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியதால், குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் தேங்கிய வெள்ளநீர் வடிய தொடங்கி உள்ளது. இதில் குண்டுஉப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், சுபஉப்பலவாடி, கண்டக்காடு, சின்னகங்கணாங்குப்பம் உள்ளிட்ட பகுதியில் வெள்ளநீர் முற்றிலும் வடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டது.
ஆனால் கடலூர் வெளிசெம்மண்டலம் பகுதியில் பெருமளவில் வெள்ளநீர் வடிந்து விட்ட நிலையில், தற்போது சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த வெள்ளநீரை, மின்மோட்டார்கள் மூலம் மீண்டும் தென்பெண்ணையாற்றிலேயே வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தேங்கிய வெள்ளநீரும் வேகமாக குறைந்து வருகிறது.மேலும் வெள்ளம் வடிந்த பகுதியில் தொற்று நோய் பரவா வண்ணம் துப்புரவு ஊழியர்கள் மூலம் பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வெளிசெம்மண்டலம் சூர்யாநகரை சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட 60 வயது பெண்ணின் வீட்டுக்குள் கடந்த 19-ந் தேதி வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், கால் நடக்க முடியாமல் இருந்த அந்த பெண்ணால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்திற்கு மத்தியில் கடந்த 3 நாட்களாக தவித்தார்.
இதற்கிடையே வெள்ளம் வடிய தொடங்கியதால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அந்த பெண்ணின் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள், அவர் 3 நாட்களாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தது அப்போது தான் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு படகு மூலம் அழைத்து வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக அந்த பெண்ணை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக பெண் வீட்டுக்குள்ளே தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Time:4 Minute, 21 Second