குமராட்சி அருகே உள்ள சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையூர், சிறகிழந்தநல்லூர், காட்டுக்கூடலூர், லட்சுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். மேலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கு காப்பீடு செலுத்தியிருந்தனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த தொடர் கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் மழையில் மூழ்கி சேதமாகின. இதில் சுற்று வட்டார பகுதி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில், சர்வராஜன்பேட்டை உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி மனு அளிப்பதற்காக நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார், விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் விவசாயிகள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் அவர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து சென்று, கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தர்ணாவை கைவிட்டு, கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து, கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read Time:2 Minute, 32 Second