சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை நீடிப்பதாகவும், இதன் விளைவாக, மதுரை, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அடுத்த சில மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இது தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பில்லை எனவும், மழையின் தீவிரம் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 26,27,28 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.