0 0
Read Time:5 Minute, 15 Second

மயிலாடுதுறை, நாகை  மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழையால் நாகை மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சேதமடைந்த பயிர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு குழுவை அனுப்பியது. மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையில், விஜய் ராஜ் மோகன், ரணஞ்ஜெய்சிங், வரபிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை பார்வையிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் பகுதியில் மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் குறித்த புகைப்படங்கள் புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். 

அப்போது மத்திய குழுவினரிடம், விவசாயிகள் சங்க மாவட்ட குழு செயலாளர் வீரராஜ் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதம் அடைந்து விட்டது. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் வெள்ள நிவாரண தொகையாக ரூ 10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இந்தஆய்வின்போது மத்திய குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

நாகை மாவட்டத்தில் ஆய்வுஇதையடுத்து மத்திய குழுவினர் மாலை  4 மணியளவில் நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி, வடவூர் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பாதிப்புக்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய குழுவினரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய குழுவினர் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை சேதத்தை பார்வையிட சென்றனர். நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %