தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 91 ஆடுகள், 140 மாடுகள் என மொத்தம் 231 கால்நடைகள் செத்துள்ளன. மேலும் 1,452 கோழிகளும் செத்துள்ளன. இதேபோல் 2,300 குடிசை வீடுகளும், 136 ஓடு வீடுகளும் சேதமடைந்துள்ளது.இதுதவிர கனமழையால் கடலூர், சிதம்பரம், புவனகிரியை சேர்ந்த 3 ஆண்களும், விருத்தாசலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகி உள்ளனர். 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். கனமழையால் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், சுமார் 16 ஆயிரத்து 500 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். அந்த குழுவினர் நேற்று முன்தினம் 2 குழுக்களாக பிரிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு சேதவிவரங்களை கணக்கிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான விஜய் ராஜ்மோகன், ரணஞ்செய் சிங் மற்றும் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 10.20 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்திற்கு வந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
தொடர்ந்து மத்திய குழுவினரிடம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதை பெற்றுக் கொண்ட மத்திய குழுவினர், அங்கு சாலையோரம் பெரிய கங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குமாரபேட்டை, தேவங்குடி, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் நெற்பயிர்கள், சாலைகள், தடுப்பணைகள், வீடுகள் சேதமடைந்ததை புகைப்பட காட்சியாகவும், வீடியோ காட்சியாகவும் வைத்திருந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களிடம், சேத விவரங்கள் குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக கமிஷனருமான கே.பணீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் விளக்கினர். இதை கவனமாக கேட்ட மத்திய குழு அதிகாரிகள், அதை குறிப்பெடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கடலூர்-புதுச்சேரி சாலையில் நடந்து சென்று பெரிய கங்கணாங்குப்பத்தில் மழைவெள்ளத்தால் இடிந்து விழுந்து சேதமடைந்த குடிசை வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் உரிமையாளர், தங்களுக்கு வீடு கட்டி கொடுப்பதுடன், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், விரைவில் அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கும், தண்ணீர் புகுந்த வீட்டிற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மத்திய குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய குழுவினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலைக்கு காலை 10.40 மணி அளவில் புறப்பட்டு சென்றனர்.
அங்கு கார் மூலம் சென்ற மத்திய குழுவினர் செல்லும் வழியில் பரவனாறு தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டபடி சென்றனர்.
தொடர்ந்து பூவாலை கிராமத்தில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகள், சேதமடைந்த வேளாண் பயிர்கள் என சேத விவரங்கள் அடங்கிய புகைப்படங்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். இதை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களிடம், சேத விவரங்களை கலெக்டர், விளக்கி கூறினார். அப்போது சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ.வும் சேத விவரங்களை மத்திய குழுவினரிடம் தெரிவித்து, உரிய இழப்பீட்டு தொகை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மழையால் சேதமடைந்த நெல், பருத்தி, மரவள்ளி, பூ, காய்கறி போன்ற பல்வேறு பயிர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அவர்களிடம் வேளாண்மை துறையினரும் பாதிப்பு விவரங்களை எடுத்துரைத்தனர். இதை கவனத்துடன் அவர்கள் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பரவனாற்றில் மூழ்கி அழுகி போன நெற்பயிர்களை பிடுங்கி மத்திய குழுவினரிடம் விவசாயிகள் காண்பித்தனர். இதை பார்வையிட்ட அவர்களிடம், பயிர்கள் முழுமையாக அழுகி விட்டது. இனி இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு காண அருவா மூக்கு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.