மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு 4-ம் நம்பர் புதுத்தெரு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் கழிவு நீரை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்தோடி பாசன வாய்க்கால் மற்றும் மாவட்ட கலெக்டர் வாயிலில் செல்லும் மழைநீர் வடிகாலில் கலந்து ஓடுகிறது. மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்றி நோய் பரவுவதை தடுக்க வேண்டும். மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
Read Time:2 Minute, 14 Second