கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இருப்பினும் தாழ்வான இடங்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.சிலருக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர் மழை, வெயில், பனி என சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பலருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர். வழக்கமாக திங்கட்கிழமை மட்டும் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் வெளி நோயாளிகள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்காக நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
பலர் வெளி நோயாளிகளாகவும், சிலர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றும் அதேபோல் நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் ஆண்கள், பெண்கள் அதிகம் பேர் நீண்ட வரிசையில் நின்றனர். டாக்டர்களை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றதை பார்க்க முடிந்தது.
நேற்று மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காய்ச்சலுக்காக வந்து சென்றனர். இதில் 21 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே நேற்று முன்தினம் 55 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதுள்ள சூழலில் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read Time:3 Minute, 7 Second