0 0
Read Time:3 Minute, 19 Second

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள் பலியாகின. வீடுகளும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.இந்நிலையில் வளிமண்டல சுழற்சியானது இலங்கைக்கு மேல் கன்னியாகுமரி வரை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. சில நேரங்களில் கன மழையாகவும் பெய்தது. அதன்பிறகு மழை ஓய்ந்து வெயில் அடித்தது. சில நேரங்களில் மழையும், வெயிலும் சேர்ந்து அடித்து வானிலை போக்கு காட்டியது.
சிறிது நேரம் மழை, சிறிது நேரம் வெயில் என சீதோஷண நிலை மாற்றத்தினால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மாலை 3 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டமாக மாறி தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதேபோல் விருத்தாசலம், பெண்ணாடம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. 

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மதியம் 2 மணியளவில் காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கந்தகுமாரன் வழியாக சேத்தியாத்தோப்பு செல்லும் வீராணம் ஏரிக்கரை சாலையில் கொள்ளுமேடு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்த புத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து புளியமரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %