0 0
Read Time:6 Minute, 30 Second

பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாவட்ட செயலாளர்கள் செல்வ.மகேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு காலத்தில் பெருமைக்குரிய மாவட்டமாக கடலூர் இருந்தது உண்மை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு பெருமைக்குரிய மாவட்டமாக இல்லை. இப்போது நாம் 5 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் 7 பேர் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட 2 பேர் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.அவர்களை வெற்றி பெறாமல் செய்தவர்கள் நமது கட்சிக்காரர்கள். பொறுப்பில் இருந்தவர்கள், இருக்கிறவர்கள். அப்படி நடக்கலாமா, இது பெருமைக்குரிய மாவட்டமா? கோவிந்தராசு பிரச்சினைக்காக வேறு யார் போராடினார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நீங்கள் ஓட்டு போட்டு இருக்கிறீர்கள். அவர்களை வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

இந்த மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நாம் தனியாக நின்றபோது, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது எங்கே சென்றீர்கள். எங்கே போனது உங்கள் வீரம், உணர்வு. ஆனால் தனியாக நின்ற போது, நாம் பெற்ற வாக்குகளை எண்ணி வேதனைப்பட வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நாம் அனைத்து இடங்களிலும் போட்டியிடவில்லை. ஏன், நாம் விலைபோனோமா, விட்டுக்கொடுத்தோமா, அல்லது லோக்கல் அண்டர்ஸ்டேன்டிங்கா.

வேட்பாளர்களை நிறுத்த ஆட்கள் பஞ்சமா, முடியவில்லை என்றால் உங்களுக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய பதவிகள் தேவையா?. நீங்கள் வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். நாம் தமிழகத்தை ஆள வேண்டும். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக வர நீங்கள் உழைக்க வேண்டும்.அப்படி உழைத்தால் இந்த பதவிகளை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாடு மேய்க்கும் சிறுவனிடம் நீ தான் மாவட்ட செயலாளர் என்று கொடுத்து விடுவேன். ஆட்சிக்கு வராமல், அடுத்தவர்களுக்கு துதி பாடியே வருகிறோம்.

1947-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தி.மு.க. 3-வது தேர்தலில் ஆட்சியை பிடித்து விட்டது. 2016-ம் தனித்து போட்டியிட்ட நாம் 23 லட்சம் ஓட்டுகள் மட்டும் பெற்றோம். ஆனால் 5.6 சதவீத ஓட்டுகளை பெற்று, 3-வது பெரிய கட்சி என்று பேசி வருகிறோம். வருகிற தேர்தலில் ஒரு முறை அன்புமணிக்கு வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். சமூக வலைதளங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் நம்மை ஆட்சி கட்டிலை நோக்கி அழைத்துச்செல்லும். கோட்டையில் நம்முடைய, உங்களுடைய கொடி பறக்கும். அதை நோக்கி நமது உழைப்பு இருக்க வேண்டும். இளைஞர்களை நம்பி இருக்கிறோம்.

பொது வாழ்க்கையில் இந்த மக்களுக்காக 42 ஆண்டுகள் நான் பாடுபட்டு வந்துள்ளேன். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று, நாம் 20 சதவீதம் யார், யாருக்கெல்லாம் வாங்கி கொடுத்தோமோ, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வன்னியர்களுக்கு ஒன்றுமே கொடுக்கக்கூடாது. 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று வழக்கு போடுகிறார்கள். தீர்ப்பு நமக்கு பாதகமாக வருகிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு போய் இருக்கிறது. தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. சிறந்த வக்கீல்களை நியமனம் செய்துள்ளார்கள். அதனால், இந்த தீர்ப்புக்கான தடை உத்தரவு நமக்கு கிடைக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.கோலூன்றி நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக உழைப்பேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அன்புமணியை மக்கள் தேடுவார்கள். அவர் முதல்-அமைச்சராக நல்ல ஆட்சியை தருவார். கோவிந்தராசு வழக்கை நான் கையில் எடுத்து இருக்கிறேன். நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். காவல்துறை சரியாக, நேர்மையாக செயல்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %