உலகில் சக மனிதனை மற்றொரு மனிதன் மோசடி செய்து அவரிடமிருந்து பொருள் பணம் நகை உள்ளிட்டவைகளை அபகரிப்பது என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு சில பெண்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடமிருந்து பணம் நகை உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றும் சம்பவங்களும், அதேபோன்று சில ஆண்கள் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களிடம் இருந்து நகை பணம் உள்ளிட்டவைகளை அபகரிக்கும் நிகழ்வை நாம் அன்றாடம் செய்திகள் வாயிலாக அறிந்த ஒன்றே. அதேபோன்று ஒரு சம்பவம் தான் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரைச் சேர்ந்தவர் தங்கையன் என்பவரின் மகன் 28 வயதான சின்னதம்பி. வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் மேட்டு தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் 18 வயதான அபிநயா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தனது வருங்கால மனைவிக்கு 2 பவுன் தங்க செயின், 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்ளேண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சின்னதம்பி வாங்கி தந்துள்ளார். இந்நிலையில் சின்னதம்பி கடந்த 15-ஆம் தேதி அபிநயாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணம் தொடர்பாக பேசிய போது, அபிநயாவின் பெற்றோர் அபிநயாவைக் காணவில்லை என்றும், தேடி வருவதாகவும் அவரது தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அபிநயாவை தொடர்பு கொண்டு சின்னதம்பி பேசியபோது, நான் தங்களை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றும், நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள், இது என் பெற்றோருக்கும் தெரியும் என்று கூறி துண்டித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களிடம் சொல்லி கேட்டபோது, நிச்சயதார்த்தத்துக்கு செலவு செய்த 50 ஆயிரம் ரூபாய், சின்னதம்பி வாங்கித்தந்த செயின், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருப்பித் தந்துவிடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னும் 10 நாட்கள் கடந்த பிறகும் அப்பொருட்களையும், பணத்தையும் தராமல் மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் அலைக்கழித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மணமகன் தனது குடும்பத்தினருடன் தாங்கள் செலவு செய்தவற்றை திரும்ப பெற்று தருமாறு மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.