தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின மேலும் தொடர்ந்து நிரம்பி கொண்டே வருகிறது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
இது தவிர கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணை ஆறு, மணிமுத்தா ஆறு என ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆற்றில் வரும் தண்ணீரின் அளவானது குறைந்து காணப்பட்டது. பின்னர் தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மீண்டும் தாண்ணீர் வரத்து சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து உள்ள வெல்லிங்டன் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவை எட்டி உள்ளது, இதன் காரணமாக கடைக்கால் வழியாக இன்று காலை 9 மணி நிலவரப்படி 1,700 கன அடி வினாடிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. வெல்லிங்டன் அருகே உள்ள ஓடை பகுதிகளில் உள்ள புலிவலம், பெருமூளை, சிறுமூளை, புதுக்குளம் நாவலூர், நிதிநத்தம், ஆகிய 6 கிராமங்களில் உள்ள 6 தரைபாலங்கள் முழ்கி அதன்மீது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் ஆற்று பகுதியை சுற்றி உள்ள 6 கிராம மக்கள் திட்டக்குடி பகுதிக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். முதியவர்கள் குழந்தைகளை தண்ணீரை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகியோர் அறிவுறுத்தி உள்ளது.
நேற்றே தண்ணீர் வருதை அதிகாரிகள் யாரும் தெரிவிக்காத காரணத்தினால் திடீரென்று இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 25 க்கும் மேற்பபட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தனி தீவில் இருப்பது போல் இருகிறார்கள். இந்த சூழலில் நகர்ப்புறங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் தங்களுக்கு போதிய அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் இப்பகுதிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.