மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இவர் மனைவியை பிரிந்து தற்போது தாயுடன் வசித்து வந்தார்.வைத்தியநாதசாமிக்கும் அவரது சித்தப்பா மகன்களான திவாகர், தினேஷ் ஆகியோருக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாகவும் இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூவலூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாதசாமி மது போதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது வைத்தியநாதசாமி அருகில் கிடந்த இரும்பு கைப்பிடி உடைய துடைப்பத்தால் திவாகரை தாக்க முற்பட்டுள்ளார்.அப்போது திவாகர் அதனை தடுத்து அதே துடைப்பத்தால் வைத்தியநாதசாமி தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த வைத்தியநாதசாமி, மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார், வைத்தியநாதசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தியநாதசாமி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களான திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Time:2 Minute, 32 Second