நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் மழைநீரை அகற்றக்கோரி கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை உடனே வடிய வைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் நெய்வேலி அருகே இந்திரா நகர் ஊராட்சி மற்றும் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட மேற்கு காலனி பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் அங்குள்ள சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வரும்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும், தேங்கியிருக்கும் மழைநீரை உடனே வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலைகுப்புசாமி, வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் வாய்க்காலை அகலப்படுத்தி தண்ணீரை வடிய வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Read Time:3 Minute, 16 Second