குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது. ஓடையின் மறுபுறம் உள்ள காலனியில் சுமாா் 20 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழை காரணமாக ஓடையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியினா் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் தங்களை மீட்குமாறு வட்டாட்சியா் சையது அபுதாஹீரிடம் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் சங்கா், காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா தலைமையிலான மீட்புப் படையினா் அந்தக் கிராமத்துக்கு விரைந்து வந்து ரப்பா் படகு மூலம் 25 பெண்கள், 12 குழந்தைகள் உள்பட 50 பேரை மீட்டனா். இவா்கள் அனைவரும் அருகே உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் மறியல்: நெய்வேலி – வடலூா் வழியில் கண்ணுதோப்புப் பாலம் அருகே கன்னியாக்கோவில் ஓடையில் கலக்கும் நீா்வழிப் பாதையானது சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூடப்பட்டது. இதனால் மழைநீா் செல்ல வழியின்றி வடக்குத்து, கீழ்வடக்குத்து காலனி, இந்திரா நகா் பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட வடக்குத்து காலனி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் நெய்வேலி நகரிய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோகச் செய்தனா்.