புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை எனவும் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறினார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்த புவியரசன், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு நகரக்கூடும் எனக் கூறினார். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின்பு மத்திய வங்கக்கடலில் புயலாக மாறும் என குறிப்பிட்டார்.
டிசம்பர் 4ம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகள் இடையே கரையை கடக்கக்கூடும் என தெரிவித்தார். தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை எனக்கூறிய அவர், தமிழ்நாட்டில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் எனக் கூறினார்.
அடுத்த 4 நாட்களுக்கு தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசவுள்ளதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.