கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தேசிங்கு என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நவீன்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அந்த பஸ்சை மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் முந்தி செல்ல முயன்றனர். ஆனால் பஸ் டிரைவர் அவர்களுக்கு வழிவிடப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பஸ் ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் சென்றபோது, அந்த 3 பேர் பஸ்சை முந்திச்சென்று சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழிமறித்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கு சாலையோரத்தில் இளநீர் வியாபாரி வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததோடு, பஸ் டிரைவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் கண்டக்டர் நவீன்குமார் வைத்திருந்த பணப்பையை பிடுங்கி அதில் இருந்த 1,200 ரூபாயை எடுத்துகொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியவர்கள் பெரிய காட்டுப்பாளையம் சேர்ந்த சீனிவாசன் (வயது 22), பிரிதிவிராஜன் (22), புதுச்சேரி மாநிலம் பாகூரை சேர்ந்த மருதநாயகம் (22) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சீனிவாசன் உள்ளிட்ட 3 பேர் பஸ் கண்ணாடியை உடைக்கும் காட்சி அந்த பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Related Tags :
Read Time:2 Minute, 42 Second