மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகரில் இருந்து மாப்படுகை செல்லும் சாலையில் காவிரி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் கல்லணை -பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் ராகவன், நகராட்சி ஆணையர் பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில், மாப்படுகை சாலையில் காவிரி கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவது. இனி அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாதவாறு கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பது. அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அங்கு உடனே அமைத்து தருவது என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய சங்க பிரமுகர் ராமலிங்கம், வக்கீல் வேலு குணவேந்தன் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read Time:2 Minute, 23 Second