உலகின் பல நாடுகளில் வேகமாக பரவிவரும் ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் மெதுவாக பரவி வருகிறது. இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்
ஒமிக்ரான் நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதையடுத்து நாடு முழுவதும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஓமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
விமான நிலையத்தில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஓமிக்ரான் வகை என உறுதியானதால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
21 பேருக்கு தொற்று: இந்தியாவில் ஒருவர் இருவர் என தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 17 பேருக்கு ஓமிக்ரான் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள், எஞ்சிய 3 பேர், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேர், கர்நாடகாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அலை:
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மகராஷ்டிரா அரசின் கூடுதல் தலைமை செயலாளர், மருத்துவர் பிரதீப் வையாஸ் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் விரைவாக செலுத்தி முடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மாஸ்க் அணிவது உள்பட பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விழிப்புணர்வு அவசியம்:
ஓமிக்ரான் வைரஸ் தற்போதைக்கு புரியாத புதிராக உள்ளது. நாம் அச்சம் அடைய வேண்டியது இல்லை. விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஓமிக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை என்று மராட்டிய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஷஷாங்க் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நிச்சயம் பரவும்:
இதனிடையே உலகத்தில் ஓமிக்ரான் தொற்று நிச்சயம் பரவும் என நம்புவதாக கூறும் உலக சுகாதார மையம், அதற்கு ஏற்பட்ட உலக நாடுகள் தங்களையும் தங்களின் சுகாதார அமைப்பையும் தயார்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.