தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (07.12.2021), தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் நாளை மறுநாள் (08.12.2021) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள் ளது.