0 0
Read Time:3 Minute, 21 Second

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.

மொத்தம் 896 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது. அப்போது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத துறை அலுவலர்களை கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கண்டித்தார்.அடுத்த கூட்டத்துக்கு வரும் போது, உரிய தகவல்களை கொண்டு வர வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் குடும்ப வாரிசுதாரர்கள் 4 பேருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பேருக்கு தேசிய அறக்கட்டளையின் கீழ் பாதுகாவலர் நியமன சான்றினையும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். 

கூட்டத்தில் திருநங்கை ஒருவர், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்யக்கோரி அளித்த மனுவை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு முகவரி மாற்றம் செய்து குடும்ப அட்டையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %